Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170

கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

7. கண்ணபிரான் பாண்டவர்கட்காகத் துரியோதநனிடம் தூதுசென்று ஸமாதான வழிகள் பல பேசியும் “வீரபோக்யா வஸுந்தரா” ஆகையாலே போர்க்களத்தில் வீரத்தனத்தைக் காட்டி வெற்றி பெறுமவர்களே ராஜ்யமாளக் கடவர்கள் என்று த்ருதராஷ்ட்ர வகுப்பினர் கூற, பிறகு யுத்தமே நடத்தக் கடவதாக முடிவு பெற்றது. இருவகுப்பினரும் படைத்துணை வேண்டிக் கண்ணபிரான் பக்கலிலே வந்தார்கள். துரியோதனன் கண்ணபிரானைத் துணையாக விரும்பவில்லை. *க்ருஷ்ணா ச்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாச்ச பாண்டவா: * என்னும் புகழ் பெற்ற பாண்டவர்களுக்கே கண்ணபிரான் துணைவனாக நிற்கவேண்டிற்று. பக்த பரதந்திரனான ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா தன்னுடைய பரமபக்தனான அர்ஜுனனுக்குத் தேர்ப் பாகனாயிருந்து கொண்டு குருசேத்திரமென்னுமிடத்தில் வந்து போர் புரிய அணி வகுத்து நின்றனன். அப்பொழுது அர்ஜுனன் கண்ணபிரானை நோக்கி 'பெருமானே! இந்தப் போரில் யான் யாருடன் போர் புரிவது தகுதியானது? துர்ப்புத்தி வாய்ந்த துரியோதனனுக்குத் துணைபுரிவதற்காக யார் யார் வந்திருக்கிறார்களென்பதை நான் கண்டு தெரிந்து கொள்ளுமாறு தேரை இரண்டு சேனைகளினிடையில் நிறுத்த வேணும்’ என்று கூற, அப்படியே கண்ணபிரான் இரண்டு படைகளினிடையே தேரை நிறுத்தி 'அர்ஜுநா! இவ்விரு படைகளிலுமிருக்கின்ற போர்வீரர்களைப் பாராய்' என்றனன்.

8. அப்போது அர்ஜுநன் போர்க்களத்தில் வந்து நின்றிருக்குமவர்கள் தந்தைகளாயும் புத்திரர்களாயும் பேரன்மார்களாயும் தோழன்மார்களாயு மிருப்பது கண்டு அவர்களிடத்து இரக்கங்கொண்ட மனத்தனாய் ஸ்ரீக்ருஷ்ணனை நோக்கி 'கண்ணா! போர்புரிய ஆயத்தர்களாயிரா நின்ற இந்த உற்றாருறவினரைக் காணவே எனது காண்டீவ தனுசு கையில் நின்றும் சோர்கின்றது; என்னுடல் எரிகின்றது: மயிர்க் கூச்செறிகின்றது; தேஹம் நடுங்குகின்றது; நான் நிற்கமாட்டேன்; என் மனம் குழம்புகின்றது; அபசகுனங்கள் காண்கின்றன; அமர்க்களத்தில் இவ்வுறவினர்களைக் கொன்று நான் என்ன நன்மையடையப் போகிறேன்? எனக்கு யுத்தமும் வேண்டா, யுத்தத்தில் வெற்றியும் வேண்டா; இராச்சியமும் வேண்டா, இன்பமும் வேண்டா; உற்றாருறவினர்களோடு கூடிக் களித்து வாழ்வதற்காகவன்றோ பொருட் செல்வம் விரும்பப்படுகின்றது; அன்னவர்களனைவரும் உடலையும் உயிரையும் செல்வத்தையும் பொருள்படுத்தாது போர்புரிய வந்து நிற்கின்றனரே. பிறகு அவர்களைவென்று கொன்ற பின்பு இந்த ராஜ்யத்தினாலுண்டாகு மின்பம் யாதோ? நான் பிழைத்திருந்துதான் என்ன பயன்? மூவுலகவின்பமும் கிடைப்பதா யிருந்தா லும் நான் இவர்களைக் கொல்லமாட்டேன். இந்த அற்ப பூமிக்காக இவர்களைக் கொல்ல நினைப்பதும் ஏலாதது. நெருப்பிட்டுக் கொல்பவர்கள், விஷமிட்டுக் கொல்பவர்கள், பிறருடைய தனங்களையும் பூமியையும் மாதரையும் கொள்ளை கொள்பவர்களான ஆததாயிகளைக் கொலை செய்வதில் குற்றமில்லையாகையாலே அப்படிப் பட்டவர்களில் தலைவர்களான இத்துரியோதனாதியர் கொலை செய்யத் தகுந்தவர்களேயானாலும் இவர்களைக் கொல்ல நான் விரும்புகின்றிலேன். இந்த பந்துக்களைக் கொன்று நான் எப்படி ஸுகமடைவேன் ? க்ருஷ்ணா! ராஜ்ய ஸுகங்களுக்காக உறவினரைக் கொல்வது பெரும் பாதகமல்லவோ ? ஆகையால் அஸ்த்ர சஸ்த்ரங்களை நான் பிரயோகிக்கப் போகிறதில்லை. பிரயோகியாமல் வாளா நிற்கு மென்னைத் துரியோதனாதிகள் கொன்றபோதிலும் அதனால் எனக்கு வருத்தமில்லை; அது எனக்கு க்ஷேமமேயாகும்- என்று கூறி வில்லைக் கீழே பொகட்டு வருத்தமும் கலக்கமும் மிகப் பெற்றுத் தேரிடையே உட்கார்ந்து விட்டான்; என்கிற விதுவே நாற்பத் தேழு சுலோகங்கள் கொண்ட முதலத்யாயத்தின் பிரமேயம்.

9. இப்படி அஸ்தாநே கலங்கின அர்ஜுனனுடைய கலக்கத்தைப் போக்கி அவனை யுத்தத்திலே மூட்டுவதற்காகக் கண்ணபிரான் இரண்டாமத்யாயத்திலிருந்து பல பல வுபதேசங்களைச் செய்தருள அவனும் தெளிவு பெற்று 'ஸ்திதோஸ்மி கதஸந் தேஹ: கரிஷ்யே வசனம் தவ' என்று சொல்லிப் போர் புரிய இசைந்தானென்பது கீதையின் முழுப்பொருள். இவ்விஷயத்தில் புத்திமான்கள் முக்கியமாக ஆலோசிக்கத் தக்கவை இரண்டு விஷயங்களுண்டு. யுத்தத்திற்குக் குதூஹலியாய்வந்து சேர்ந்த அர்ஜுநன் யுத்தாடம்பரம் செய்ய வேண்டியிருக்க அது செய்யாமல் தேர்ப் பாகனாயிராநின்ற தேவனை நோக்கி உபயஸைன்யங்களிலுமிருக்கிற பந்துக்களை இன்னாரின்னாரென்று பார்ப்பதற்காக இந்தத் தேரைச் சிறிது முன்னே கொண்டு போய் உபயஸேனைகளின் முன்னே நிறுத்து என்றானே; இப்போது அர்ஜுனன் இப் படிச் சொல்லவேண்டிய அவச்யமேயில்லை. ஏற்கெனவே இவன் தெரிந்துகொள்ளாத அம்சம் என்ன இருக்கிறது? யுத்தத்தில் எதிரிகளாக வரப்போகிறவர்கள் அல்லது வந்திருக்கிறவர்கள் இன்னாரின்னாரென்பதை அர்ஜுனன் இதற்குமுன் தெரிந்து கொள்ளாமல் இனிமேலா தெரிந்து கொள்ளப்போகிறான்; இல்லையே. அவர்களை யெல்லாம் வதைத்தொழிக்க வேணுமென்கிற ஊக்கங்கொண்டே போர்புரிய ஆயத்தனாய் வந்துநின்றவன் இப்போது இன்னாரின்னார் போர்புரிய வந்திருக்கிறார் களென்பதைக் கண்டறிந்து கொள்ளவேணு மென்றது சிறிதும் பொருத்தமாக இல்லையே. இது எப்படி பொருந்தும்? இது முதன்முதலாக ஆலோசிக்க வேண்டிய விஷயம். இனி மற்றொரு விஷயமாவது, யுத்தம் பண்ணமாட்டேனென்ற அர்ஜுநனை யுத்தஞ்செய்ய இசைவிக்க வேண்டியதுதானே கண்ணபிரானுக்குக் கர்த்தவ்யம்; அதற்கு இவ்வளவு விஸ்தாரமான கீதாசாஸ்த்ரம் வேணுமோ? ‘அப்பா! நீ க்ஷத்ரியனாகையாலே யுத்தஞ்செய்யக் கடமைப்பட்டவனாகிறாய். என்கிற விவ்வளவை உபபத்திகளுடன் சொன்னாற்போதும்; இதற்கு ஒரு அத்யாயமே அதிகம். அத்தனையத்யாயங்கள் வளர்த்தியிருப்பது எதற்காக? என்பது. ஆக இவ்விரண்டு விஷயங்களையும் ஆலோசித்துப் பொருத்தமான முடிவு கட்டவேண்டியது அவச்ய மாயிருக்கின்றது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top