Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170
Skip to content
62. இப்படியாகச் சொல்லிக்கொண்டுபோய், சொல்லிக்கொண்டுபோய், ப்ராஹ்மண ஜாதிக்குரிய தருமமின்னது, க்ஷத்ரிய ஜாதிக்குரிய தருமமின்னது, வைச்ய ஜாதிக்குரிய தரும மின்னது, சதுர்த்த ஜாதிக்குரிய தருமமின்னது என்று சொல்லுகையில் “சௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம், தானமீச்வரபாவச்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்” என்கிற ச்லோகத்தினால் க்ஷத்ரியதருமத்தை நெஞ்சிலே யூன்ற வருளிச் செய்தான். இதில் பூர்வார்த்தத்தில் ஐந்து குணங்கள் க்ஷத்ரியனுக்குச் சொல்லப்படுகின்றன. இவற்றுள் சௌர்யமாவது-போர்க்களத்தில் சிறிதும் கூசாமே புகுவதற்குரிய வல்லமை. தேஜஸ்ஸாவது-பிறரால் அசைக்கவும் முடியாமை. த்ருதியாவது-தொடங்கின காரியத்தை எத்தனையிடையூறுகள் மிடைந்தாலும் சளைக்காமல் நிறைவேற்றியே தீரும்படியான மனவுறுதி. தாக்ஷ்யமாவது- எந்த காரியத்தையும் இனிது நிறைவேற்ற வல்லனாகை. [யுத்தே சாபி அபலாயநம்] போர்புரியவந்து நின்றபின தனக்கு மரணமே ஸம்பவிக்குமென்று தோன்றினாலுங் கூட முதுகுகாட்டியோடாமை. அர்ஜுநன் க்ஷத்ரிய ஜாதியிலே பிறந்தவனாதலால் அவனுக்கு ஸ்வஜாதி தர்மமாகிய யுத்தத்தை வழுவறச்செய்கை ஆவச்யக மென்பதை மேன்மேலும் வற்புறுத்திச் சொல்லி, தான் சொன்னபடியே கேட்டாக வேண்டு மென்றும் தன்னையே தஞ்சமாகப் பற்றியாகவேண்டுமென்றும் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலுரைத்து, கடைசியாக அவன் வாக்கிலிருந்து "நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்தா த்வத்ப்ரஸாதாத் மயாச்யுத, ஸ்திதோஸ்மி சுதஸந்தேஹ; கரிஷ்யே வசநம் தவ." என்று சொல்லுவித்துக் கீதையைத் தலைக்கட்டினானாயிற்று. கண்ணா! உனது திருவருளால் என்னுடைய விபரீதஜ்ஞான மெல்லாம் தொலைந்தது; உண்மைப் பொருளுணர்ச்சி உண்டாயிற்று; மனத்திலிருந்த கல்மஷங்களெல்லாம் தீர்ந்து ஒரு நிலையில் நின்று விட்டேன்; இனி நீ சொன்னபடி கேட்கிறேன் என்று சொன்னானென்கிற இவ்வளவையும் த்ருதராஷ்ட்ரனுக்கு ஸஞ்ஜயன் சொல்லி நின்றான்.
63. கீதையுபதேசம் கேட்பதற்கு முன்பு அர்ஜுநன் இருந்த இருப்பு என்ன? இப்போது நின்றநிலை என்ன? என்பதே ஸாரமாக இங்கு உய்த்துணரத் தக்கது. நான் யுத்தம் செய்யமாட்டேனென்று வில்லையும் அம்புகளையும் விட்டெறிந்து தேர்த் தட்டிலே உட்கார்ந்துவிட்டான் என்பது முதலத்யாயத்தின் முடிவில் சொல்லப்பட்டது. நீ சொன்னபடியே செய்கிறேனென்று சொல்லி யுத்தத்திற்கு உடன்பட்டு நின்றானென்பது பதினெட்டாமத்யாயத்தின் முடிவில் சொல்லப்பட்டது. அவரவர்களுக்கு ஸ்வதர்மத்தில் ருசியையுண்டாக்குவதே கீதையின் முழுநோக்கு என்ற தாயிற்று. இந்த கீதாசாஸ்த்ரம் அவதரித்திருக்கிற ரீதியை ஊன்றி நோக்குமிடத்து வெகு ஆச்சரியமாகவேயிருக்கிறது. திருவாய்மொழியில் (4-8-6.) *அறிவினால் குறை வில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொரு மூர்த்தி* என்கிற பாசுரத்தின் பெருமை ஸாரமாக அருளிச் செய்யப்பட்டது. இதன் அருமைபெருமையைக் கண்ணபிரான் தானே முடிவில் "இதம் தே நாதபஸ் காய நாபக்தாய கதாசந, ந சாசுச்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி” என்கிற வொரு ச்லோகத்தினால் அற்புதமாகப் பேசினான். அர்ஜுநா! நான் உனக்குச் சொன்ன இந்த பரம குஹ்யமான சாஸ்த்ரத்தை அதபஸ்கனுக்குச் சொல்லாதே, அபக்தனுக்குச் சொல்லாதே, அசுச்ரூஷுவுக்குச் சொல்லாதே, என்னிடத்தில் அஸூயை யுள்ளவனுக்குச் சொல்லாதே யென்று கட்டளையிடுகிறான் கண்ணபிரான். இங்கு “ந ச மாம் யோப்யஸூயதி” என்ற விடத்திற்கு நம் பாஷ்யகாரர் பாஷ்ய மிட்டருளுகிறார்; காணக் கண்ணாயிரம் வேண்டும், கேட்கக் காதாயிரம் வேண்டும். நவில நாவாயிரம் வேண்டும். "மத்ஸ்வரூபே மதைச்வர்யே மத்குணேஷு ச கீர்த்தி தேஷு யோ தோஷமாவிஷ்கரோதி ந தஸ்மை வாச்யம்." என்று பாஷ்ய ஸூக்தி யுள்ளது. என்னுடைய ஸ்வரூபத்தையும் என்னுடைய ஐச்வர்யத்தையும் என்னுடைய குணங்களையும் ஒருவர் எடுத்துரைத்தால் அவற்றில் தோஷாவிஷ்கரணம் செய்பவனே என்னிடத்தில் அஸூயை கொண்டவன், அவனுக்கு நீ ஒன்றும் சொல்லாதே-என்று கண்ணபிரான் கட்டளை யிடுவதாக ஸ்வாமி பாஷ்யம் செய்தருளுகிறார். பகவத் குணங்களை எத்தனை உயர்த்தியாகச் சொன்னாலும் அத்தனையும் ஒக்கும்! ஒக்கும்!! என்றிராதே அவற்றில் அஸம்பாவிதத்வத்தை உபபாதிக்கிறோம் கேண்மினென்று, தங்களுக்குண்டான பாண்டித்யத்தை யெல்லாம் பகவத் குணங்களை இல்லைசெய்வதிலும் இறக்குவதிலுமே உபயோகப்படுத்துகிறவர்கள் பகவத் கீதைக்கு வெகுதூரத்திலே நிற்கவேண்டுமென்பது ஸ்வாமி திருவுள்ளமாகக் காண்கிறது.