Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170
Skip to content
55. ஆனால், திருக்குருகைப்பிரான் பிள்ளான், நம்பிள்ளை முதலான பூருவாசாரியர்கள் தம் வியாக்கியானங்களில் வெளியிட்டருளின் பொருள் இங்ஙனே யல்ல. எங்ஙனே யென்னில்; 'உலகில்லையென்றே' என்றவிடத்தில், உலகு என்பதற்கு சாஸ்த்ரமென்று பொருள்; ப்ரபல பாபம் செய்து வைத்த நீங்களும் ப்ரபல ஶ்ருதிகளுக்கே பெறக்கூடியதான மோக்ஷத்தைப் பெற்றுவிட்டீர்களாகில் மரியாதையே அழிந்துவிடுமென்று நினைத்தே எம்பெருமான் உங்களை தேவதாந்தர பிரவணர்களாக ஆக்கிவைத்திருக்கிறான்; அவரவர்கள் பண்ணின புண்ய பாபாரூப கருமங்களுக்குத்தக்கபடியே பலன் கொடுப்பதென்று ஒரு சாஸ்த்ர மர்யாதை ஏற்பட்டிருக்கிறது; நீங்கள் முற்பிறவிகளில் பிரபலமான தீவினைகளைச் செய்திருக்கிறபடியால் அவற்றின் பலனாக இப்பிறப்பில் க்ஷூத்ரதேவதா பஜநம்
பண்ணும்படியாக உங்களை உபேக்ஷித்திடலாயிற்று. கொடிய பாவங்கள் செய்த உங்களையும் புண்யாத்மாக்களைப் போலே ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணமே செய்யும்படி பண்ணிவிடுவரானால் அப்போது முன்சொன்ன சாஸ்த்ர மரியாதை அழிந்துவிடுமான்றோ; அங்ஙனம் அழியாமைக்காகவே உங்களை இங்ஙனே நிறுத்திவைத்தது- என்பதாகவே ஆழ்வார் திருவுள்ளம் பற்றிய பொருள் என்று பூருவாசாரியர்கள் உபபாதித்தருளுகிறார்கள். வேதாந்த தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் "தத்தத் கர்மாநுரூபம் பலவிதரணத: ” என்று இவ்வர்த்தத்தையே வெளியிட்டருளினர். ஆகவே ஆழ்வார் திருவுள்ளத்தால் உலகு என்பதற்கு சாஸ்த்ரமென்னும் பொருள் தேறிவிட்டபடியால் இதையடியொற்றியே ஸ்வாமி பாஷ்யகாரர் ப்ரக்ருத கீதாச்லோகத்தில் [*அதோஸ்மி லோகே வேதே ச*] என்றவிடத்தில் று லோக சப்தத்தை சாஸ்த்ர பரமாக நயிப்பித்தருளினாரென்று அறியக் கிடக்கிறது. இந்த கீதா ச்லோகத்தை அப்பாசுரத்தின் வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளைளையும் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் எடுத்துக் காட்டியு மிருக்கிறார்கள்.
56. எம்பெருமானார்க்கு முன்னே ஆளவந்தாரும் லோக சப்தத்தை சாஸ்த்ரமென்னும் பொருளில் ப்ரயோகம் செய்தருளினார். ஸ்தோத்ர ரத்நத்தில் (23) "ந நிந்திநம் கர்ம ததஸ்தி லோகே" என்ற விடத்திற்கு வியாக்கியானஞ் செய்தருளா நின்ற பெரியவாச்சான்பிள்ளை “ஆயிரமடங்கு என்னால் பண்ணப்படாதது யாதொரு நிந்திதகருமமுண்டு அதிபாதக மஹாபாதகா திகள், அது சாஸ்த்ரத்திலுமில்லை ;..... அநுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்தில் காணலாமிறே" என்று அருளிச் செய்திருக்கிறார். தேசிகனும் ஸ்தோத்ரபாஷ்யத்தில் அவ்விடத்தில், “லோக்யதே அநேநேதி லோக: — ப்ரமாணம்; தஸ்மிந்நாஸ்தி; அப்ரமாணமித் யர்த்த:. அத்ர சாஸ்த்ரரூபப்ரமாணவிசேஷ விவக்ஷா. ” என்றருளிச் செய்தார். இவற்றால் ஆளவந்தாரும் லோகசப்தத்தை சாஸ்த்ரபரமாகவே கொண்டாரென்று விளங்காநின்றது. இப்படி ஆளவந்தாரும் எம்பெருமானாரும் கொண்டது ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியே யென்பது நிஸ்ஸந்தேஹம். ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளில் ப்ரவேசமற்ற மற்றையோர்கள் எங்கும் லோக சப்தத்தை இங்ஙனே உபதேசங் கொள்ளக் காணாமையாலே. இனி அடுத்த அத்யாயத்திற்குச் செல்வோம்.
57. பதினாறா மத்யாயத்தில் தேவாஸுரவிபாகம் முக்கியமானது. தைவப் பிறப்பு அஸுரப்பிறப்பு என்று பிறப்பிலேயே இருவகையுண்டு. (16-6) "த்வெள பூத ஸர்கெள லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச” என்று, உலகத்திலுள்ள பிராணி வர்க்கங்களை யெல்லாம் இரண்டே வகுப்பாக வகுக்கிறான் கீதாசார்யன். தைவ வகுப்பு ஒன்று, அஸுரவகுப்பு மற்றொன்று. இதைப்பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள வேணுமானால் "தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய ஆஸுரீ மதா” (16-15.) என்கிறவொரு பாதி ச்லோகத்தை மனனம் பண்ணினாற்போதும். ஸம்ஸாரபந்தத்தில் நின்றும் விடுபட்டு ஸத்கதியை யடையும் வழியைச் சிந்தனை செய்யும் வகுப்புதான் தெய்வவகுப்பெனப்படுவது. அப்படிப்பட்ட சிந்தனையின்றிக்கே அதோகதியை யடையும் வழியைத்தேடும் வகுப்புத்தான் ஆஸுர வகுப்பெனப்படுவது. இங்ஙனே சொன்னதைக் கேட்டவுடனே அர்ஜுநனுடைய முகத்தில் துக்கக் குறி காணப்பட்டது. நம்மைக் கண்ணபிரான் தைவவகுப்பில் சேர்த்திருக்கிறானோ ஆஸுரவகுப்பில் சேர்த்திருக்கிறானோ தெரியவில்லையே யென்று அர்ஜுநன் கவலை யுற்று நின்றான். அதை யறிந்த கண்ணபிரான் உடனே யருளிச் செய்கிறான் -"மா சுசஸ் ஸம்பதம் தைவீம் அபிஜாதோஸி பாண்டவ!" என்று. அப்பா! நீ கவலை கொள்ளாதே, நீ தெய்வ வகுப்பில் சேர்ந்தவனே யென்று கூறி அவனைப் பரமானந்தப்படுத்துகிறான். தான் செய்யும் உபதேசங்களை அவன் ருசிவிச்வாஸங்களோடு கேட்டுக் கொண்டிருப்பது பற்றியே அவனைத் தைவஸம்பத்து வாய்ந்தவனாக அறுதி யிட்டருளினன் கண்ணபிரான். நமக்கு ஆஸ்திக்ய முள்ளதா? நாஸ்திக்ய முள்ளதா? என்பது உலகில் அவரவர்களுடைய நெஞ்சுக்குத் தெரியுமன்றோ. ஆஸ்திக்ய முண்டாகில் நம்முடைய பிறப்பு தெய்வப்பிறப்பு என்று தானே நிச்சயித்துக் கொள்ளலாம். அஃதில்லையாகில் ஆஸுரப் பிறப்பே நமக்கு வாய்த்ததென்று நிச்சயித்துக் கொள்ள என்ன தடை? இத்தீய பிறப்பின் தன்மைகளை மேலே பல ச்லோகங்களினால் கண்ணபிரான் தானே நன்கெடுத்துக் கூறுகின்றான். "ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே, அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம்” இத்யாதிகள் காண்க.