Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170

கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

28. (2-45.) "த்ரைகுண்யவிஷயா வேதா: நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந!" இங்கு சங்கராசார்யருடைய பாஷ்யத்தில், த்ரை குண்யமாவது ஸம்ஸாரம் என்றும், 'நிஸ்த்ரைகுண்யோ பவ' என்பதற்கு (நிஷ்காமோ பவ) என்று பொருளென்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமாநுஜ பாஷ்யத்தில் மிக விளக்கமும் விரிவுமுள்ளது. ஸத்வம் ரஜஸ் தமஸ் என்கிற முக்குணங்கள் மலிந்த புருஷர்கள் இங்கு த்ரைகுண்ய சப்தத்தினால் சொல்லப்படுகிறார்கள். அன்னவர்களைப்பற்றியவை வேதங்கள் என்ற படி வேதங்களானவை கேவலம் ஸாத்விகர்களுக்கே வழிகாட்டுகின்றன வென்றில்லை. உலகிலுள்ள சேதநர்கள் சிலர் ஸாத்விகர்களாயும் பலர் ராஜஸர்களாயும் தாமஸர்களாயு மிருக்கக் காண்கிறோம்; வேதங்கள் எல்லார்க்கும் வழிகாட்டியாக வேண்டும். பலசரக்குக் கடைகளில் சர்க்கரை வெல்லம் குங்குமப்பூ கடுகு மிளகு சீரகம் முதலிய எல்லாப் பொருள்களும் (நேர்வாளமுட்பட) விற்கப்படுவது போல, வேதங்கள் முமுக்ஷக்களுக்கும் வழிகாட்டுகின்றன; புபுக்ஷுக்களுக்கும் வழி காட்டு கின்றன; பரஹிம்ஸைக்குரிய உபாயங்களையும் காட்டுகின்றன. ஆனால் வேதம் காட்டுகின்றவற்றையெல்லாம் நாம் கொள்ளவேணுமென்பது கிடையாது. கடையில் விற்கப்படுகிற விஷத்தையுமா நாம் வாங்கிக்கொள்ளுகிறோம் ? இல்லையே. அதுபோல, ராஜஸர்களுக்கும் தாமஸர்களுக்கும் வேதம் காட்டுகிற வழிகளை நாம் பற்றலாகாது. [நிஸ்த்ரைகுண்யோ பவ அர்ஜுந!) இதற்கு ஸ்வாமியினுடைய பாஷ்யம் அற்புதமானது. "இதாநீம் லத்வப்ரசுரஸ் த்வம் ததேவ வர்த்தய, நாந்யோந்யஸங்கீர்ண குணத்ரயப்ரசுரோ பவ, ந தத்ப்ராசுர்யம் வர்த்தயேத்யர்த்த:” என்பது பாஷ்ய ஸூக்தி. ‘நிஸ்த்ரை குண்யோ பவ'என்கிற மூலத்தை நோக்கும்போது 'ஸத்வகுணமுட்பட ஒரு குணத்தையும் நீ கைக் கொள்ளாதே' என்று கண்ணபிரானருளிச் செய்வதாகத் தோன்றும். "முக்குணத் திரண்டவையகற்றி, ஒன்றினிலொன்றி நின்று” என்று திருமங்கையாழ்வார் திருவெழுகூற்றிருக்கையிலருளிச் செய்தபடியே ரஜஸ்தமோ குணங்களை விட்டு ஸத்வகுண மொன்றிலேயே ஊன்றியிருக்கக்கடவாய்-என்று ஸ்வாமி பாஷ்ய மருளிச் செய்வதற்கு மூலத்தில் ஆதாரமில்லை போல் தோன்றும். மேலே உத்தரார்த்தத்தில் 'நித்ய ஸத்வஸ்த்த:' என்று ஸ்பஷ்டமாகச் சொல்லி யிருப்பதற்குச் சேரவே ஸ்வாமி உரைத்தருளினாரென்று கொள்ளவேணும். ஆனாலும் 'நிஸ்த்ரைகுண்ய:' என்பதற்கு முக்குணங்களு மில்லா தவனென்று தானே பொருள்படும்; ஸத்வகுண ப்ரசுரன் என்று பொருள்பட வழியுண்டோ வென்று கேள்வி தோன்றும். கேண்மின். (நிஸ்த்ரைகுண்ய:) என்பதற்கு மூன்று குணங்களும் பிசிறி யிருக்கப் பெறாதவன் என்பதே அக்ஷரலப்யமான பொருள். 'அந்யோந்யஸங்கீர்ண குணத்ரயப்ரசுரோ ந பவ' என்று ஸ்வாமியருளிச் செய்தது பொருத்தமானதே. வேதங்களில் ராஜஸ தாமஸர்களுக்குக் காட்டியுள்ள உபாயங்களில் கண் வையாதே ஸாத்விகர்களுக்குக் காட்டியுள்ள உபாயங்களில் மாத்ரமே நீ கண்வைக்கக் கடவாய் என்றதாகத் தேறி நின்றது.

29. (2-47.) "கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந." நித்யம் நைமித்திகம் காம்யம் என்று சொல்லப்படுகிற கருமங்களைச் செய்வதில் மாத்திரம் நீ அதிகரிக்கலாமே யல்லது அவற்றின் பலனில் அதிகரிக்கலாகாது-என்பதாக இதற்குப் பொருள். பலனை விரும்பக்கூடாதென்று சொல்லப்படுகிறதா? அன்றி, பலன் கிடைத்தாலும் அதனை அநுபவிக்கலாகாதென்று சொல்லப்படுகிறதா வென்று இங்கு விமர்சிக்க நேர்கின்றது. “ப்ரயோஜந மநுத்திச்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே’ என்று, பலனை விரும்பாமல் மூடன்கூட ஒரு காரியத்தில் கைவைக்க மாட்டா னென்று சாஸ்த்ரமே சொல்லுகையாலே பலனை விரும்பக் கூடாதென்கை பொருந்தாது. பலன் கிடைத்தால் அதையநுபவியாமல் விட்டுவிடுவது புருஷதந்த்ரமன்றே, ஸுகமோ துக்கமோ எது நேர்ந்தாலும் அநுபவித்துக்கொண்டு தானே யிருக்கிறோம். அநுபவிப்பதும் விட்டிடுவதும் நம்மிஷ்டமன்றே. ஆகவே, பலன் கிடைத்தாலும் அதனை யநுபவிக்கலாகாதென்று சொல்லப்படுவதாகக் கொள்வதற்கும் ஒளசித்யமில்லை. பின்னை யாது பொருளென்னில்; செய்கிற காரியங்களுக்குப் பலன் கிடைத்தே தீரும்; பலனை நீ கோலாதே. உன்னுடைய அற்பபுத்தியினால் நீ கோலு வாயாகில் க்ஷுத்ரபலனுக்கு மேற்பட உத்தம பலனைக் கோலுவதற்கு உனக்குத் தெரியாது. அந்தப் பொறுப்பை என்னிடமே விட்டுவிடுவாயானால் என் கருத்தால் உத்தமமான பலனே உனக்குக் கொடுக்கப்படும்-என்று இங்ஙனம் திருவுள்ளம்பற்றியே "மா பலேஷு கதாசந” என்றருளிச் செய்ததாகக் கொள்க.

30. “யா நிசா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்த்தி ஸம்யமீ, யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முதே:” (2-69.) என்னுமிந்த ச்லோகம் புதிர் போலுள்ளது. ஸர்வப்ராணிகளுக்கும் எது இரவோ அவ்விரவில் ஜிதேந்த்ரியனானவன் விழித்துக்கொண்டிருக்கிறான்; ஸர்வப்ராணிகளும் கண்விழித்துக் கொண்டிருக்கும்படியான பகலானது ஜிதேந்த்ரியனுக்கு இரவாகிறது, என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. நாம் கண்ணெடுத்துப் பார்க்க விரும்பாமல் வெறுத்திருக்கும் விஷயத்தை ஜிதேந்த்ரியர்கள் விரும்பிப் பார்க்கிறார்களென்றும், நாம் விரும்பிப்பார்க்கும் விஷயங்களை அவர்கள் காணகில்லாமல் வெறுத்திருக்கிறார்களென்றும் சொல்லப்பட்டதாகிறது. பகவத் பாகவத விஷயங்களை தாம் விரும்பிப் பாராமல் வெறுப்புக் கொண்டிருக்கிறோம்; அவ்விஷயங்களையே ஸாதுக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். லெளகிக விநோதங்களை நாம் விரும்பிப் பார்க்கிறோம்; அவற்றைக் காணக் கண்கூசியிருக்கிறார்கள் ஸாதுக்கள். நம்முடைய பகல் ஸாதுக்களுக்கு இரவாகிறது; ஸாதுக்களின் பகல் நமக்கு இரவாகிறது. ஸ்வரூபாநுரூபங்களான விஷயங்களில் கண்ணோட்டம் செலுத்தாமல் ஸ்வரூபநாசகங்களான விஷயங்களிலேயே நாம் கண்ணோட்டம் செலுத்தியிருப்பது வர்ஜிக்கத் தகுந்தது என்னுமிடம் இதனால் சிக்ஷிதமாகிறதென்று கொள்க.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top