Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170

பகவத் கீதை

கீதார்த்தசங்க்ரஹம்

52. பதினான்காமத்யாயத்தில் (24, 25ல்) "குணாதீதஸ்ஸ உச்யதே” என்று ஓர் உத்தமாதிகாரி சொல்லப்படுகிறான். இவனுக்கு குணாதீதனென்று பெயர். குணங்களைக் கடந்தவனென்று பொருள். ஸகல குணங்களுக்கும் கொள்கலமாக இருப்பவனன்றோ உத்தமாதிகாரி; குணங்களைக் கடந்தவன் எப்படி உத்தமாதிகாரி என்று கேள்வி பிறக்கக்கூடும். இங்கு விவக்ஷிக்கப்படுகிற குணங்கள் சமதமாதிகுணங்களல்ல; ஸத்வ ரஜஸ்தமோ குணங்கள். *முக்குணத்து வாணியத்து இரண்டிலொன்று நீசர்கள்* என்று திருமழிசைப்பிரானும். *முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினி லொன்றி நின்று* என்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்கிறபடி ரஜஸ் தமோகுணங்களிரண்டுதானே ஹேயங்கள்; குணம் உபாதேயந்தானே; அதுவுங்கூட ஹேயமென்று தோன்றும்படி யென்று நினைக்க வேண்டா; சுத்தஸத்வம் என்பது உபாதேயமே. ராஜஸ் தமஸ்ஸுக்களோடு கலசின ஸத்வம் உபாதேயமன்று, தமோகுணமும் ரஜோகுணமும் ரஜஸ்தமோமிச்ர ஸத்வகுணமுமாகிய அது ஹேயமே. குணங்களையுங் கடந்தவன் குணாதீதனெனப்படுவான். இவனை நாம் எப்படித் தெரிந்துகொள்வதென்றால் அவனுடைய நிலைமையைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அந்த நிலைமை தெரிவிக்கப்படுகிறது இரண்டு சலோகங்களினால். ஸமது:³க²ஸுக:² ஸ்வஸ்த:² ஸமலோஷ்டாஶ்மகாஞ்சந: । துல்யப்ரியாப்ரியோ தீ⁴ரஸ்துல்யநிந்தா³த்மஸம்ஸ்துதி: ॥ 14-24॥ மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: । ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ கு³ணாதீத: ஸ உச்யதே ॥ 14-25॥ என்னு மிவ்விரண்டும் ச்லோகங்களும் அநவரதம் கண்டபாடம் செய்யத்தக்கன. ஸுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் ஒரே விதமான சித்தவ்ருத்தியை யுடையனாயிருக்கவேணு மென்கிறது “ஸமது:³க²ஸுக:" என்பதனால். அதன்மேல் [ஸ்வஸ்த:] என்கிறது. இதற்கு இவ்விடத்தில் அபூர்வமான வ்யுத்பத்தியைக் காட்டியருளுகிறார் ஸ்வாமி யெம்பெருமானார். "ஸ்வஸ்மிந் ஸ்தித: - ஸ்வஸ்த்த.'' (தன்னிடத்திலேயே யிருப்பவன்) என்கிறார். உடனே அதை விவரிக்கிறார் "ஸ்வாத்மைகப்ரியத்வேந தத்வ்யதிரிக்தராதிஜந்மமரணாதிஸுகது:க்கயோ: ஸமசித்த இத்யர்த்த:." என்று. உலகில் ஸுக துக்கம் ப்ரியாப்ரியம் என்னும் சப்தங்கள் விசேஷமான பொருள்வாசியையுடையன பர்யாயசப்தங்கள் போலவே காணும். ஆனாலும் விஷய பேதத்தாலே பொருள் பேதித்திருக்கும். “ஸ்வஸ்த: “ என்பதற்கு "ஸ்வாத்மநி ஸ்தித; ப்ரஸந்ந: " என் பது சங்கரபாஷ்யம். அதையே நன்கு விவவரித்துக் காட்டுகிறது ராமாநுஜபாஷ்யம். இதற்குமேல் "ஸமலோஷ்டாச்மகாஞ்சன:" என்கிறது. லோஷ்டத்தையும் கல்லையும் பொன்னையும் துல்யமாக நினைப்பவன். இப்படியாக மேன்மேலும் சொல்லப்படுகிற தன்மைகள் இந்நிலத்தில் நம் போன்ற பாமரர்களுக்கு எவ்வளவு பழக்கம் செய்தாலும் வாய்க்கக்கூடியவையல்ல. இத்தகைய நலம் வாய்ந்தவர்கள் பூலோகம் முழு வதற்குள்ளும் ஒருவரிருவர் தேறுவதும் அருமையென்னலாம். ஆயினும் இப்படிப் பட்ட ச்லோகங்களை நாம் மனனம் செய்துகொண்டேயிருந்தால் பெரிதும் பயன்படும் என்றிவ்வளவே சொல்லலாம்.

53. இனி பதினைந்தாமத்யாயத்திற் புகுவோம். இதில் விமர்சதோரணையில் தெரிவிக்கும் ஸாரமான விஷயமொன்றைக் குறிக்கொண்மின். நமது ஸ்ரீபாஷ்ய காரர் பெரும்பாலும் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைத் தழுவியே ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் முதலியவற்றை அருளிச்செய்ததாக நம் முன்னோர்கள் திருவுள்ளம்பற்றி இருக்கிறார்கள். "பாஷ்யகாரர் இதுகொண்டு ஸூத்ரவாக்யங்களொருங்கவிடுவர்” என்று ஆசார்யஹ்ருதயத்தில் ஸ்பஷ்டமாகவும் பணிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக நாம் பலவிடங்கள் காட்டியிருக்கிறோம். இப்போது இவ்வத்யாயத்தில் ஒரு நுட்பம் காட்டுகிறோம். இங்கு (15-18) *யஸ்மாத் க்ஷரமதீதோஹம்* என்கிற ச்லோகத்தில் *அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: * என்றுள்ளது. இங்கு "லோகே வேதே ச" என்றதற்கு லோகத்திலும் சாஸ்த்ரத்திலும் என்று பொருள் ஸாதாரணமாக எல்லார்க்கும் தோன்றக் கூடியது. இதர பாஷ்யகாரர்கள் இப்படித்தான் அர்த்தம் செய்திருக்கக் காண்கிறோமிங்கு. ஸ்வாமி யெம்பெருமானாரோ வென்னில், தமது பாஷ்யத்தில் அங்ஙனம் பொருள் பணிக்கவில்லை. "வேதார்த்தாவலோகநாத் லோக இதி ஸ்ம்ருதிரிஹோச்யதே; ச்ருதௌ ஸ்ம்ருதௌ ச இத்யர்த்த:. " என்பது கீதாபாஷ்ய ஸ்ரீஸூக்தி. லோகம் என்பதற்கு கரணே வ்யுத்பத்தியினால் சாஸ்த்ரமென்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. இப்படித்தான் கொள்ளவேணுமென்று தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந்த தேசிகனும் உபபாதநம் செய்தருளியிருக்கிறார். லோகமென்னும் சொல்லுக்கு இப்படி சாஸ்த்ரமென்கிற பொருளைக் கொண்டவர்கள் வேறு யாருமில்லை. லோக சப்தத்திற்கு சாஸ்த்ரமென்று அர்த்தமுள்ளதாக கோசங்களிலும் காணப்படவில்லை. “லோகஸ்து புவநே ஐநே" என்று தான் அமரகோசத்திலுள்ளது. இதர கோசங்களிலும் இங்ஙனே காண்கிறது. இப்படியிருக்க நம் ஸ்வாமி பாஷ்யகாரர் லோக பதத்தை சாஸ்த்ர பர்யாயமாகக் கொண்டு பொருளருளிச் செய்ததற்கு நிதான மென்ன? என்று பராமர்சிக்க வேணும். நம்மாழ்வாருடைய வொரு ஸ்ரீஸூக்தியே இதற்கு மூலகாரண மென்கிற தத்துவத்தை இங்கு நாம் நிரூபிக்க விரும்புகிறோம்.

54. நம்மாழ்வார் திருவாய்மொழியில்* ஒன்றுந் தேவு முலகு முயிருமென்று தொடங்கும் பதிகத்தில் (4-10-6) * போற்றி மற்றோர் தெய்வமென்னும் பாசுரத்தில் *எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே* என்றருளிச் செய்துள்ளார். இப்பதிகத்தில் ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்துவத்தை உபபாதித்து வந்த ஆழ்வாரை நோக்கி ஸ்ரீமந் நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்து வைத்தது ஏன்?' என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அவர்களுக்கு விடை கூறுவதாக இப்பாசுரமமைக்கப்பட்டுள்ளது. இப்பாசுரத்தில் "எல்லீரும் வீடுபெற்றால் உல கில்லை யென்றே” என்பது தான் உயிராக வுள்ளது. எல்லாரும் ஸ்ரீமந்நாராயணனையே தொழப் பெற்றால் எல்லாருமே வீடு பெறுவர்கள்; அப்படி எல்லாரும் வீடு பெற்று விட்டால் உலகு இல்லையாய் விடும்; (அதாவது லீலாவிபூதி அடியற்றுப் போய்விடும்;) அங்ஙனம் ஆகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதா பஜனம் பண்ணி ஸம்ஸாரிகளாய்த் தொலைந்து போம்படி செய்து வைத்தான்—என்பதாக இப்பாசுரத்திற்கு ஆபாத ப்ரதீதியில் பொருள் தோன்றக் கூடும். தசோபநிஷத் பாஷ்யகாரரான ரங்கராமாநுஜ ஸ்வாமி வடமொழியில் (திருவாய் மொழிக்குத்) தாம் பணித்த ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தில் இவ்விதமான பொருளையே எழுதியுள்ளார். "பவாத்ருசாநாம் ஸர்வேஷாம் மோக்ஷலாபே லீலாவிபூத் யந்தர்ப்பூதலோகாநாம் உச்சேத ஏவ ஸ்யாதிதி மத்வைவ பகவதா ஸ்வவிஷயே பக்திமநுத்பாத்ய தேவதாந்தரவிஷயே பக்திருந்பாதிதேதி பாவ:." என்பவை அந்த ஸ்வாமியினுடைய வியாக்கியான பங்க்திகள்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top