Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6170
Skip to content
34. இதற்கடுத்த ச்லோகம் (3-22) "ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந, நாநவாப்தமவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி." என் பது. இதில் பகவான் தானும் கர்மாநுஷ்டானத்தில் ஊன்றி யிருப்பதாக வற்புறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. க்ருஷ்ணாவதாரத்திற்கு முந்தின அவதாரமான ஸ்ரீ ராமாவதாரத்தில் இது தன்னை ஸுஸ்பஷ்டமாகக் காணலாம். விச்வாமித்ர முனிவன் தசரத மன்னவனிடம் வந்து *அஹம் வேத்மி மஹாத்மாநம்" இத்யாதிகளைச் சொல்லி ஸ்ரீராமபிரானைக் கொண்டு சென்றான். "ஊநஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவலோசந:" என்று சக்ரவர்த்தி சொன்னபடி இராமன் செந்தாமரைக் கண்ணனாகையாலே ஸூர்யன் அஸ்தமித்தவாறே தாமரை முகுளிதமாகுங் கணக்கிலே இராமனும் கண்மூடினான். பிறகு ஸுப்ரபாத காலத்திலே முனிவன் "கௌஸல்யாஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே" என்று சொல்லித் துயிலுணர்த்துகிறான். "இராமா! எழுந்திரு; நாம் சீக்கிரமாக ஆச்ரமம் சென் சேர்ந்து யாகம் தொடங்கவேணும்” என்று சொல்லவேண்டியிருக்க, அங்ஙனே சொல்லாதே “உத்திஷ்ட நரசார்தூல! கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்' என்றான் முனிவன். ப்ராதஸ் ஸந்த்யாநுஷ்டானம் வழுவாமற் செய்யவேண்டுமே, அதற்காக எழுந்திராய் என்று சொன்னவிதனால் எம்பெருமானுடைய அவதாரம் முக்கியமாக தர்மாநுஷ்டானத்திற்காகவே யென்பது நன்கு விளங்கும். மேலே பிராட்டியைப் பிரிந்து வருந்திக் கிடக்கிற காலங்களிலும் பெருமாள் ஸந்தியாகாலங்களில் தவறாது ஸந்தியாவந்தனம் அனுட்டித்தபடியை வான்மீகி பகவான் அஸக்ருத் கூறியிருக்கின்றார். ஆகவே பகவான் “வர்த்த ஏவ ச கர்மணி என்று சொன்னது மிகப் பொருந்தும்.
35. இனி நான்காமத்யாயத்தைப் பற்றிச் சிறிது விரிவாக வுரைக்க விரும்புகிறோம். கீதையில் “அர்ஜுந உவாச, ஸ்ரீபகவாநுவாச” என்னுமிவை மாறி மாறி வருவதைக் காணலாம். அர்ஜுநன் கேள்வி கேட்பன்; அதற்குக் கண்ணபிரான் விடை கூறுவன். வினாவுக்குப் பிறகு விடை, விடைக்குப் பிறகு வினா-என்றிப்படி மாறி மாறி நடந்து செல்லும். மூன்றாமத்யாயத் தொடக்கத்தில் 1, 2 ச்லோகங்கள் அர்ஜுநனுடைய வினா. அதன் பிறகு 3 முதல் 35 ச்லோகம் வரை பகவானுடைய விடை. அதன் பிறகு முப்பத்தாறாவது ச்லோகமொன்று அர்ஜுநனுடைய வினா. பிறகு 37 முதல் 43 வரை அத்யாயம் பூர்த்தியாக பகவானுடைய விடை. அவ்வளவோடு அத்யாயம் முடிந்திருக்கிறது. இனி, மேல் விஷயம் நடைபெற வேணுமானால் நான்காமத்யாயத்தின் தொடக்கத்தில் [அர்ஜுந உவாச] என்று அர்ஜுநனுடைய வினா ஆரம்பமாகவேணும். கீழே பகவானுடைய விடை முடிந்திருப்பதால் அதற்குமேல் அர்ஜுநன் வினவினால் பகவான் விடை கூறவேணும். அப்ருஷ்டோத்தரமாகச் சொல்லத்தகாதன்றோ. அர்ஜுநனோ ஒன்றும் கேட்டிலன். அப்படியிருந்தும் நான்காமத்யாயம் [ஸ்ரீபகவாநுவாச] என்றே தொடங்குகிறது. இதை ஆழ்ந்து விமர்சிக்குமளவில் ஒன்று தோன்றுகிறது. கீழே கர்மயோகத்தைப்பற்றி விரிவாகச் சொல்லக் கேட்ட அர்ஜுநனுக்குத் தலைவேதனையுண்டாயிற்றுப் போலும். அதனால் கீதை கேட்டது போதுமென்றெண்ணித் தலைகுனிந்து வாளா விருந்தான். 'நாம் ஏதாவது கேட்டால் தானே கண்ணன் வாய்திறக்கப்போகிறான். நாம் வாய்மூடிக் கிடந்தோமாகில் தானே நிற்கிறான்; கீதையும் ஸமாப்தமாகிறது' என்று நினைத் தான் போலு மர்ஜுநன். இன்னுமெவ்வளவோ அர்த்தவிசேஷங்களைச் சொரிய நினைத்திருக்கிற கண்ண்பிரான் எங்ஙனம் வாய்மூடி நிற்பன்? இவ்வளவோடு கீதையை எப்படி முடித்திடுவன்? "சாதகஸ்த்ரிசதுராந் பய:கணாந் யசதே ஜலதரம் பிபாஸயா, ஸோபி பூரயதி விச்வமம்பஸா ஹந்த ஹந்த! மஹதாமுதாரதா" என்கிறான் பண்டிதராஜன். கேட்பவர்கள் சிறிதே கேட்டாலும் மஹோதாரர்கள் தாராளமாகவன்றோ கொட்டுவர்கள். அதுபோல் கண்ணபிரானும் “யச்ச்ரேய: ஸ்யாத் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்.' என்று முந்துற முன்னம் அர்ஜுநன் பிரார்த்தித்ததையே குவாலாகக் கொண்டு இடையிடையே அவனுடைய அபேக்ஷையை ப்ரதீக்ஷியாமல் திருவுள்ளத்தில் தோன் றுகிற அரும்பெரும் பொருள்களை யெல்லாம் தானே ப்ரஸக்தியிட்டுக் கொண்டு வெளியிடுகிறானாயிற்று. இப்படி மேலும் பல விடங்களிற் காணலாம். அர்ஜுநன் கேளாமலிருக்க பகவான் தானாகவே அடியிட்டுச் சொல்லுகிற அத்யாயங்கள் மேலேயும் பலவுள.
36. இப்போது நான்காமத்யாயத் தொடக்கத்தில் "இமம் விவஸ்வதே யோகம் போக்தாவாநஹமவ்யயம், விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்; ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷ்யோ விது;, ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட; பரந்தப, ஸ ஏவாயம் மயா தேத்ய யோக: ப்ரோக்த: புராதந:, பக்தோஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யோததுத்தமம்." என்று பகவான் சொன்னான். எப்படியாவது அர்ஜுநன் வாய்திறந்து கேள்வி கேட்கும்படி செய்யவேணு மென்றே கண்ணன் இது கூறினன். இந்த ச்லோகங்களின் பொருள் யாதென்னில்: அப்பா அர்ஜுநா! இப்போது நான் உனக்குக் கர்மயோகத்தைப்பற்றி விரிவாகச் சொன்னேனே, இது கேவலம் யுத்தப்ரோத்ஸாஹநத்திற்காக இப்போது புதிதாய்ச் சொல்லப்பட்ட தென்று நினையாதே; மந்வந்தரத்தின் ஆதியிலேயே ஸகல ஐகதுத்தாரணார்த்தமாக பரம புருஷார்த்தமான மோக்ஷத்திற்கு ஸாதநமாய் இந்த யோகத்தை நானே விவஸ்வானுக்குச் சொன்னேன்; விவஸ்வான் மனுவுக்குச் சொன்னார்; மநு இக்ஷ்வாகுவுக்குச் சொன்னார்; இப்படியாக ஸம்ப்ரதாய பரம்பரயா ப்ராப்தமான இந்த யோகத்தை பூருவர்களான ராஜர்ஷிகள் உபதேசமுறையில் தெரிந்து கொண்டார்கள்; அப்படிப்பட்ட யோகம் இடையில் நெடுங்காலம் தகுந்த அதிகாரிகளில்லாமையாலே விநஷ்டப்ராயமாயிருந்தது. அந்த புராதந யோகமே தான் இப்போது உன்னுடைய பக்தியும் நேசமும் காரணமாக உனக்கு என்னாலுபதேசிக்கப்பட்டது. இதை நான் தவிர வேறொருவரும் தெரிந்து கொள்ளவும் சொல்லவும் முடியாது; இது வேதாந்தோதிதமான உத்தமரஹஸ்யமன்றோ- என்பதாம். பகவான் இப்படி சொன்னதில் எவ்விதமான அநுபபத்தியுமில்லை; உண்மையான இவ்விஷயத்தில் எவ்விதமான ஆக்ஷேபமும் ஆஸ்திகர்கள் செய்ய ப்ரஸக்தி யில்லை. ஆனாலும் அர்ஜுநன் இதில் ப்ரபலமான ஆக்ஷேபம் செய்திருக்கிறான். அது அடுத்த ச்லோகத்தில் தெரிவிக்கப்படுகிறது-"அவரம் பவதோ ஜந்ம பரம் ஜன்ம விவஸ்வத:, கதமேதத் விஜாநீயாம் த்வமாதெள ப்ரோக்தவாநிதி." என்று. இதன் பொருள் யாதெனில்; கண்ணா! நீயோ என்னோடு ஸமகாலத்தில் ஜனித்து என்னைப் போலவே சிறு வயதுடையவனா யிராநின்றாய்; எந்த விவஸ்வானுக்கு நீ உபதேசித்ததாகச் சொல்லுகிறாயோ. அந்த விவஸ்வான் இருபத்தெட்டு சதுர்யுகங்களுக்கு முன்னே யிருந்தவனாதலால் மிகமிக முற்பட்டவன். அன்னவனுக்கு நீ உபதேசித்தா யென்பது அஸம்பாவிதமாகவன்றோவுள்ளது. இதை நான் எப்படி நம்புவது? என்பதாம்.